பொண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய கிளை ஆறுகளில் ஒன்று பொண்ணை ஆறு. இது ஆந்திராவில் தொடங்கி காட்பாடி பொண்ணை வழியாக பயணித்து மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாகவும் ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாகவும் நேற்று முன்தினம் வரை சுமார் 6000 கனஅடி அளவுக்கு பொண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டிருந்தது.இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தவழகுண்டா அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று அதிகாலை பொண்ணை ஆற்றுக்கு சுமார் 11076 கனஅடி அளவுக்கு தண்ணீரானது வந்துகொண்டுள்ளது. இதன் காரணமாக பொண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளை ஒட்டிய பொண்ணை, மேல்பாடி, கீரைச்சாத்து, பரமசாத்து, பீங்கால் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கையானது விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல தற்போது பொண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள 11000 கனஅடி வெள்ளம் காரணமாக மேல்பாடி பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலமானது முழுவதுமாக மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேல்பாடி பாலமானது வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய பாலமாக கருதப்பட்டு வருகிறது. இந்த தரைப்பாலம் மூழ்கியதால் சுமார் 10 கி.மீ அளவுக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் கனமழை தொடர்வதால் இனி வரும் காலங்களிலும் பொண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டதோடு முகாம்களை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.