ராணிப்பேட்டை மாவட்டத்தில்

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப் பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 


2018 19ம் ஆண்டு முதல் 1,330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ₹10 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை, பாராட்டு சான்றிதழ் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

1,330 திருக்குறள்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இயல் எண், பெயர். அதிகாரம் எண். குறள் எண் பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குறிய திருக்குறளை கூறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

திருக்குறளின் அடை மொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். ராணிப்பேட்டை வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் படிப்பவராக இருக்க வேண்டும். அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்படும் இந்த பரிசை இதற்கு முன் பெற்றிருக்க கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந் திருந்தால் கூடுதல் தகுதி யாக கருதப்படும்.

2021-2022ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் அ பிரிவு கட்டிடம் நான்காம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0416-2256166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.