ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜவுரியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று (நவம்பர் 4) தீபாவளி கொண்டாடி வருகிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையைப் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

2014 ஆம் ஆண்டு இமாலய எல்லையிலுள்ள சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2015ஆம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 2016ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேஷம், இந்தோ திபெத் எல்லையில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் கொண்டாடினார்.
2017 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படையினருடன் கொண்டாடினார். 2018 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் அருகே இந்திய ஆர்மி மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீஸ் அதிகாரிகளுடன் கொண்டாடினார். 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக்கோடு பகுதியில் உள்ள ரஜவுரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.

இந்நிலையில் இந்த ஆண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரி அருகே நவ்ஷாராவில் உள்ள எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார்.
இதற்காகத் தனி விமானம் மூலம் நவ்ஷாரா பகுதிக்கு வந்த பிரதமர் மோடி அங்கு எல்லையோர பாதுகாப்புப் பணியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், நான் இங்குப் பிரதமராக வர வில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவராக வந்துள்ளேன். கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்த்துக்களை எடுத்து வந்துள்ளேன்.

நான் இங்கு வந்து இறங்கியதும், என் இதயம் சிலிர்ப்படைந்தது. இந்த இடம் உங்கள் துணிச்சலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நவ்ஷாராவில் நடந்த அனைத்து சதித்திட்டங்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளீர்கள் என்று ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.