Mother-daughter killed in giant rock fall on house: Tragedy in Vellore!
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த காகிதப்பட்டறை சீனிவாசா திரையரங்கம் எதிரில் உள்ள மலைப்பகுதியிலிருந்து, கனமழை காரணமாக பெரிய பாறை உருண்டு, டான்சி பின்புறம் உள்ள மலை அடிவாரத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.
வீட்டில் பிச்சாண்டி அவரது மனைவி ரமணி (45) மற்றும் மகள் நிஷாந்தி (24) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். வழக்கம்போல் நேற்று காலை பிச்சாண்டி வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் ரமணி மற்றும் மகள் நிஷாந்தி மட்டும் இருந்துள்ளனர்.
மிகப்பெரிய பாறை வீட்டின் மீது விழுந்ததில் வீடு இடிந்து சேதம் ஆகியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தினர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து மயக்கமடைந்த நிலையில் ரமணி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். பின்னர் இடர்பாடுகளில் சிக்கிய நிஷாந்தியை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டனர்.
காகிதப்பட்டறை பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இரவு 7 மணி வரை தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டும், அவர்களால் நீஷாந்தியை மீட்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 3 மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் உடன் இணைந்து பாறை அடியில் சிக்கிய பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரம் மூலம் இடிந்து விழுந்த வீட்டின் பகுதிகளை அப்புறப்படுத்தி சுமார் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக போராடி, நள்ளிரவு ஒரு மணியளவில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டிய போது நிஷாந்தியை சடலமாக மீட்டனர். மழையின் காரணமாக பாறை உருண்டு, வீட்டின் மீது விழுந்ததில் தாய் மகள் என இருவரும் உயிரிழந்திருப்பது வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.