Must operate in an environmentally friendly manner 

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இயங்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்


ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-


நடவடிக்கை


சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து வருகிறது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் புகார்கள் வருகிறது. ஆகவே தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுவதை பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இயங்க வேண்டும்.‌

தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்து நல்ல முறையில் இயங்கினால் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்படும். சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும். தொழிற்சாலையும் வளர்ச்சி அடையும். மக்களின் வாழ்க்கையும் வளர்ச்சி அடையும். இதற்கு மாறாகச் செயல்பட்டால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில்


ஆகவே தொழில்நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டவிதிகளை பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் இயங்கிட வேண்டும் என்றார்.

அதற்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுத்திகரித்து நீரை வெளியேற்றுகிறோம்.‌ புகார் வரும் பட்சத்தில் புகார் அளிப்பவர்களை அனுமதித்து அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.