One lakh 4 thousand cubic feet of water opening per second from the lake 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் தற்போது வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 65 ஆயிரத்துக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திருவல்லம் வழியாக பாய்ந்து வரும் பொன்னை ஆறு மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வாலாஜா தடுப்பணைக்கு வந்து கொண்டிருந்தது. தடுப்பணை நிரம்பி வழிந்து அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு வருவாய்த் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நள்ளிரவில் கொட்டும் மழைக்கு இடையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


இந்த நிலையில் தற்போது பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு நீர் வரத்து மேலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாலாஜா தடுப்பணைக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 84 ஆயிரம் கன அடியிலிருந்து மேலும் 20 ஆயிரம் கன அடி உயர்த்தப்பட்டு ஒரு லட்சத்து 4 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்படுகிறது. பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.