ட்விட்டர் சிஇஓ பதவியில் இந்தியர் - யார் இந்த பராக் அகர்வால்?

பராக் அக்ரவால் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார்.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகியதை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஜாக் டோர்சி திடீரென அவரின் பதவியில் இருந்து விலகியதையடுத்து தற்போது அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) இருந்து வரும் இந்தியரான பராக் அக்ரவால் ட்விட்டரின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பராக் அக்ரவால் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவர் ஆக இருந்த ஆடம் மெசிஞ்சர் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து பராக் அக்ரவால் மார்ச் 8, 2018ல் ட்விட்டரின் CTO பொறுப்புக்கு வந்தார்.

கல்வி:


பராக் அக்ரவால் பாம்பே ஐஐடி, ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் (பிஹெச்டி) கல்வி பயின்றவர். மைக்ரோசாஃப், யாஹூ மற்றும் AT&T Labs நிறுவனங்களில் ஆராய்ச்சி பயிற்சியாளர் ஆக இருந்துள்ளார்.

இதனிடையே தன்மேல் நம்பிக்கை வைத்து ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள பராக் அக்ரவால் நிறுவனத்தை மென்மேலும் உயர்த்த பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

Deep gratitude for @jack and our entire team, and so much excitement for the future. Here’s the note I sent to the company. Thank you all for your trust and support 💙 https://t.co/eNatG1dqH6 pic.twitter.com/liJmTbpYs1 — Parag Agrawal (@paraga) November 29, 2021

உலகின் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை கடந்த 2006ஆம் ஆண்டு பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் மற்றும் நோவா கிளாஸ் ஆகியோருடன் இணைந்து நிறுவினார் ஜாக் டோர்சி (வயது 45). இணை நிறுவனர்களுள் ஒருவராக இருந்தாலும் கூட விரைவாகவே ட்விட்டர் நிறுவனத்தின் முகமாக மாறினார் ஜாக் டோர்சி. 2008ஆம் ஆண்டில் ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலகிச் சென்ற ஜாக் டோர்சி டிஜிட்டல் பேமெண்ட் செயலியான square-ஐ நிறுவினார். இதுவும் பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுத்தது.

இருப்பினும் 2015ஆம் ஆண்ட் அப்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த டிக் கோஸ்டோலோ தனது பதவியிலிருந்து விலகியதால் ஜாக் டோர்சி சிஇஓவானார். இருப்பினும் இரு நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்து வந்ததால் ஒற்றை இலக்குடன் பயணிக்கக் கூடிய சிஇஓவாக இருக்க வேண்டும் என ட்விட்டரின் முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வந்ததால் ஜாக் டோர்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நெருக்கடியில் இருந்து வந்த ஜாக் டோர்சி தனது சிஇஓ பதவியை இன்று யாரும் எதிர்பாராத வகையில் ராஜினாமா செய்துவிட்டு ட்விட்டரில் இருந்து விலகியிருக்கிறார். ஜாக் டோர்சியின் விலகலையடுத்து ட்விட்டரின் புதிய சிஇஓவாக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.