டெல்லி: தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் முதலில் பெட்ரோல் விலை சதமடித்தது.

விரைவில் டீசல் விலையும் ரூ100க்கு கடந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.


என்ன காரணம்

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதளபாதளத்திற்கு சென்றது. அந்த சமயத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகரித்தது. குறிப்பாக பெட்ரோல் மீதான கலால் வரி மட்டும் கடந்த ஆண்டு ரூ 19.98 லிருந்து ரூ 32.9 ஆக உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில் வேக்சின் பணிகள் காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் வெகு விரைவாக மீண்டது. பல்வேறு நாடுகளும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். இவ்வளவு விரைவாக நிலைமை கட்டுக்குள் வரும் என யாரும் நினைக்கவில்லை.


டீசல் விலை

இதனால் பெட்ரோல், டீசல் பயன்பாடு எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரிக்கவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் மின்னல் வேகத்தில் அதிகரித்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது. குறிப்பாக டீசல் விலை அதிகரித்தால் சரக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்த செல்ல ஆகும் செலவு அதிகரித்தது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.


கலால் வரி குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதாக மத்திய அரசு முதலில் தெரிவித்தது. அதேநேரம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறையும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எவ்வளவு

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் கடந்த சில நாட்களுக்கு முன் கடைகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் ரூ 266 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் என்ன விலை

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரி குறைப்பு அமலுக்கு வந்தால் பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 10 ரூபாயும் குறையும். மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் சுமையைச் சற்றே குறைக்கும். மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலையைக் குறைப்பது தொடர்பாகவும் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.