குடிநீர் சப்ளையை சீர் செய்ய கோரி ராணிப்பேட்டை காரை பகுதி மக்கள் நேற்று அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியல் செய்தனர்.ராணிப்பேட்டையில் சட்டசபை தேர்தலுக்கு முன்புவரை சீராக இருந்த குடிநீர் சப்ளை அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. இதற்கு காரணம் மின்மோட்டார்கள் பழுது, பைப்லைனில் பழுது என்று கூறப்பட்டது.

குடிநீருடன் புழுக்கள்

காரை பகுதியில் பல வாரங்களாக சீரான குடிநீர்சப்ளை இல்லை. ராணிப்பேட்டை பஜார் வீதியை ஒட்டி உள்ள தெருக்களிலும் இதே பிரச்னைதான். நவல்பூர் மந்தைவெளி தெருவில் குடிநீருடன் புழுக்கள் கலந்து வந்தன. அன்றே அந்த பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பிளம்பர் துவங்கி கமிஷனர் வரை புகார் செய்தனர். அனைவரும் உடனே வந்து பார்ப்பதாக கூறினார்.

ஆனால் யாரும் வந்து பார்க்கவில்லை. இப்போதும் சில நேரங்களில் புழுக்கள் வருகிறது. தண்ணீரில் மண், சேறு கலந்து வருகிறது என்று சரமாரி புகார் தெரிவிக்கின்றனர்.

மறியல் போராட்டம்

இந்த பகுதி மக்கள். இந்நிலையில் காரை மேட்டுத்தெரு மற்றும் சுற்றுப்பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், சீர் செய்ய கோரியும் அந்த பகுதி மக்கள் நேற்று தெங்கால் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

மேலும் அவர்கள் வேலூர் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். தகவலறிந்து ராணிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி போலீசாருடன் சென்று சமாதானம் செய்தார்.

பைப்லைனில் பழுது

தொடர்ந்து நகராட்சி கமிஷனர் ஜெயராமராஜா, இன்ஜினியர் செல்வகுமார் மற்றும் குடிநீர் சப்ளை ஊழியர்கள் வந்தனர். பைப்லைனில் ஏற்பட்ட பழுதாலும், ஒகனேக்கல் கூட்டு குடிநீர் சப்ளை நிறுத்தத்தாலும் இடர் பாடு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மக்களின் தாகத்தை தீர்க்க உடனடியாக டாங்கர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. பைப்லைன் பழுதை சரி செய்யும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்

இதுகுறித்து பொறியாளர் செல்வகுமாரிடம் கேட்டதற்கு, ‘ கடந்த 20 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வரத்து இல்லை. பூட்டுதாக்கு அருகே பாலாற்றில் மூழ்கியுள்ள பைப் லைனில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய முடியவில்லை.

மோட்டார் பிரச்னையை சீர் செய்ய 20 ஹெச்.பி. மோட்டர் 5ம், 30 ஹெச்.பி. மோட்டார் 2ம், 40ல் ஒன்றும் ஆர்டர் செய்துள்ளோம். இன்னும் சில நாட்களில் மோட்டார் வந்துவிடும் என்றார். ஆற்று நிறைய தண்ணீர் ஓடுகிறது. எங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லையே என்பது மக்களின் புலம்பலாக உள்ளது.