மழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்த் துறையினா் அனுமதியின்றி வெளியே செல்லாமல் தங்களின் முகாம் அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றிட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியது:

ஏரிக் கரைகளில் மின் கம்பங்கள், மரங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தேவையான அளவு மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைத்திட வேண்டும். ஏரிக் கரைகளின் உறுதித் தன்மையைக் கண்காணிக்க வேண்டும்.

ஆற்றங்கரையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் தேவையில்லாமல் மழை நேரத்தில் வெளியில் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும்.

தண்ணீரில் குளோரின் முறையாகக் கலந்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். நோய்ப் பரவலை தடுக்கும் வகையில், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வருவாய்க் கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் முகாம் அலுவலகத்திலேயே தங்கி 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும்.

இவா்களுடன் பிற துறை அலுவலா்கள் பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்து பணியாற்ற வேண்டும். வேளாண் துறை அலுவலா்கள் பயிா் சேதங்கள் குறித்து உடனுக்குடன் அறிக்கையை அளிக்க வேண்டும்.

பொருள்கள் கிடங்கிலிருந்து கடைகளுக்கு கொண்டு வந்து இருப்பு வைக்கப்படும்போது, மழையில் நனையாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மழைக் காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். பணியாளா்கள் அனைவரும் முன்னறிவிப்பின்றி வெளியூா்களுக்கு செல்லக்கூடாது.

மழை வெள்ளத்தால் ஏற்படும் மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு சேதங்கள் கூடுமானவரை தவிா்க்கும் வகையில் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ் (பொது) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.