![]() |
அரக்கோணம் அடுத்த கொசஸ்தலை ஆற்றில் இருந்து நேற்று காலை கூலித் தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது. உள்படம்: ராஜேந்திரன். |
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கூலித்தொழிலாளி சடலமாக மீட்கப் பட்டார்.
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (51). கூலித் தொழிலாளி. திருமண மாகாதவர். இவர் தனது தாய் முனியம்மாளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராஜேந்திரன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி ஆற்றில் விழுந்து அடித்துச்செல்லப்பட்டார். இதைக்கண்ட பொதுமக்கள் தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் 20 மீட்பு படைவீரர்கள், கொசஸ்தலை ஆற்றில் ராஜேந்திரன் சடலத்தை தேடியும் கிடைக்கவில்லை. மேலும், இரவு நேரமானதால் தேடும் முயற்சியை கைவிட்டனர். தொடர்ந்து நேற்று 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் ராஜேந்திரனை சடலமாக மீட்டனர். தகவலறிந்து வந்த தக்கோலம் போலீசார், ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.