👉 1757ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் லண்டனில் பிறந்தார்.

👉 1964ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நாசா செவ்வாய் கோளை நோக்கி மரைனர் 4 என்ற விண்கலத்தை ஏவியது.

👉 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் மறைந்தார்.


நினைவு நாள் :-


ஜோதிராவ் புலே

🌟 இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.

🌟 சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார். கல்விதான் அனைத்திற்கும் தீர்வு என்பதை உணர்ந்து, 1842ஆம் ஆண்டு மகளிருக்கான பள்ளியை தொடங்கினார்.

🌟 இவர் சத்ய ஷோதக் சமாஜ் என்ற அமைப்பை 1873ஆம் ஆண்டு தொடங்கினார். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு 'மகாத்மா' பட்டம் வழங்கப்பட்டது.

🌟 டாக்டர் அம்பேத்கர், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாக திகழ்ந்த ஜோதிராவ் கோவிந்தராவ் புலே தனது 63வது வயதில் 1890ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


தண்டபாணி சுவாமிகள்

🌟 தமிழ் புலவர் தண்டபாணி சுவாமிகள் 1839ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்கரலிங்கம். 

🌟 'பூமி காத்தாள்' என்ற அம்மனுக்கு இப்பெயர் வருவதற்கான காரணத்தை, 8 வயதில் வெண்பா மூலம் பாடி விளக்கினார். முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும், திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.

🌟 உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, இடுப்பில் கல்லாடை அணிந்துக்கொண்டு, கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டு வலம் வந்ததால் இவரை மக்கள் தண்டபாணி சுவாமிகள் என்று போற்றினார்கள். மேலும் அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் 'வண்ணம்' என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் வண்ணச்சரபம் என்றும் அழைக்கப்பட்டார்.

🌟 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார். இவர் ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

🌟 முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களையும் தந்துள்ளார்.

🌟 எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் இவர் 1 லட்சம் பாடல்கள் எழுதியதாக கூறப்படுகிறது. அவற்றில் 50 ஆயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 59-வது வயதில் (1898) மறைந்தார்.