ராணிப்பேட்டை மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கெலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரால் சமூக மற்றும் வகுப்பு நல்லினக்கத்திற்காக வழங்கப்பட்டு வரும் கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக வரவேற்கப்படுகிறது. இந்த விருது கிரேடு-1 கிரேடு-2 மற்றும் கிரேடு- 3 ஆகிய நிலையகளுக்கு முறையே 20ஆயிரம், 10ஆயிரம் மற்றும் 5ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுள்ள குடிமக்கள், ஆண், பெண், ஆயுதப் படை, காவல்துறை, தீயணைப்புதுறை உள்ளிட்ட வீரர்களுடன் தகுதியுள்ள அரசு பணியாளர்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென வயது வரம்பு கிடையாது. 2021ம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தைரியத்துடன் செயல்பட்டு உயிர் காக்கும் தொண்டாற்றி இருக்க வேண்டும். எளிதில் கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சமூக, மத, இன கலவரங்களின்போது மதசார்பில்லாமல் தகுந்த முறையில் பிறமதத்தினரது விலைப மதிப்பில்லாத உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து இருக்க வேண்டும். ஏற்கனவே இவ்விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கிற்கொள்ளப்படும். விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு அரசின் www.tn.gov.in/announcements/ என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். 

காவல்துறையிடமிருந்து எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்ற சான்றிதழுடன் பெறப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் வேலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். இது தொடர்பாக மேலும், விவரங்கள் அறிய மாவட்ட இளைஞர் நலன் அலுவலர், வேலூர் மற்றும் 7401703483 என்ற தொலை பேசி எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.