நீலகிரியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது
நீலகிரி: நீலகிரி குன்னூர் அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. தற்போது வரை முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன என்பது தெரியவில்லை.

கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி விபத்தில் சிக்கியது.

விபத்தில் சிக்கி கீழே நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ஒன்றரை மணிநேரமாக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம்: முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவர், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர், லெப். கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சத்பால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் நீலகிரி ஆட்சியர் பார்வையிட்டு வருகிறார். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் இருந்து 6 பேர் கொண்ட மருத்துவர் குழு ஒன்று நீலகிரி விரைந்துள்ளது.