ராணிப்பேட்டை அடுத்த பெல் நரசிங்கபுரம் சர்ச் தெருவைச்சேர்ந்த ஜெகந்நாதன். பெல் கம்பெனியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரும் மனைவி சரளாவும் (55), நேற்றிரவு ராணிப்பேட்டை சிஎஸ்ஐ சர்ச்சில் நடந்த ஒரு கல்யாண வரவேற்பில் கலந்து கொள்ள பைக்கில் சென்றனர்.

சர்ச் கேட்டை அடைந்ததும் ஜெகந்நாதன், தன் மனைவியை கீழே இறக்கிவிட்டு வண்டியை பார்க் செய்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்றுள்ளார். அவர் உள்ளே சென்றதும் சரளா நடந்து சென்றார். அப்போது எதிரில் பைக்கில் வந்த 2 வாலிபர்களில் பின்னால் உட்கார்ந்திருந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சரளாவின்கழுத்தில் இருந்த செயினை பறித்தார்.

அதே வேகத்தில் பைக் பறந்தது. இதைக்கண்ட அந்த பகுதியில் இருந்த பீட் போலீஸ்காரர் பைக் வாலிபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவருக்கு போக்கு காட்டி பறந்தனர்.

இந்நிலையில் வாலிபர்கள் செயின் பறித்த போது சரளாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சரடு அவர்களின் கையோடு போய்விட்டது. 7 பவுன் தங்க செயின் சாலையில் விழுந்து தப்பியது. செயின் பறித்த வாலிபர்கள் ஆர். எக்ஸ். 100 பைக்கில் ஹெட் லைட் இல்லாமல் வேகமாக வந்துள்ளனர்.

செயினை பறித்தவுடன் பீட் போலீசாரிடம் தப்பி வானாபாடி சாலை வழியாக தாறுமாறாக பைக்கை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்ப வத்தால் அதிர்ச்சி அடைந்த சரளா பிறகு சுதாரித்துக்கொண்டு கணவனுடன் ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதுடன் தப்பி ஓடிய செயின் பறிப்பு வாலிபர் களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் பைக் வாலிபர்கள் செயின் பறித்து சென்றது ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.