ராணிப்பேட்டைைய அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மகன் சந்துரு (வயது 16). அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதரன் (19), அஜித்குமார் (22). நண்பர்களான 3 பேரும் நேற்று மாலை ஒரே மோட்டார்சைக்கிளில் செல்போனை பழுதுப்பார்க்க ஆற்காடு வந்தனர்.

அஜித்குமார் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். அவர்கள், ராணிப்பேட்டையை நோக்கி புறப்படும்போது ஆற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகில் சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு லாரி திடீரென அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் சந்துரு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீதரனும், அஜித்குமாரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.