ராணிப்பேட்டையில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவர் உஷா ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையில் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்த 296 அரசு பள்ளி கட்டிடங்கள் இடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒருபகுதியாக ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடம் இடிக்கும் பணிகள் நேற்று நடந்தது. அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறுகையில், 'பழுதடைந்த கட்டிடங்களுக்கு மாணவர்கள் செல்வதை தடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் 139 வகுப்பறைகள் இடிக்கப்பட உள்ள நிலையில் தற்போது 7 பள்ளிகளில் உள்ள 12 வகுப்பறைகள் இடிக்கப்பட்டது. பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணி முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது' என்றார். இதில், உதவி திட்ட அலுவலர் முருகன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.