ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
ராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான ஊரக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 700 பயனாளர்கள் தேர்வு செய்யும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் பெற்று பூர்த்தி செய்து இம் மாதம் 9ம் தேதிக்குள் கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகளின் பெயரிலோ அல்லது குடும்பத்தின் பெயரிலோ நிலம் இருக்க கூடாது. சொந்தமாக ஆடு, மாடுகள் இருக்க கூடாது. அவரது குடும்பத்தினர் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ளவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களோ பயனாளிகளாக இருக்க கூடாது. விலையில்லா கறவை பசுக்கள், ஆடு அலகுகள் வழங்கும் திட்டம் மற்றும் தேசிய கால்நடைகள் இயக்கம், ஊரக ஆடு வளர்ப்பு திட்டத்தில் பயனாளிகளாக இருக்க கூடாது. இதுதவிர, கிராம பஞ்சாயத்தில் நிரந்தர மாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளிகளில் 29 சதவீதம் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்தவராகவும், 1 சதவீதம் பேர் பழங்குடியினர் மக்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.