மாநகர பஸ்சில் டிக்கெட் எடுக்க கூறியதால் ஆத்தி ரமடைந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரை சரமாரியாக அடித்து விட்டு ஓடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை டி.பி.சத்திரம் செனாய்நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(36). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். அதேபோல் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கண்ணன் (42) நடத்துனராக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் 15ஜி மாநகர பஸ்சை பிராட்வேயில் இருந்து எம்எம்டிஏ காலனிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கூட்டமாக பஸ்சில் ஏறினர். அவர்களிடம் நடத்துனர் கண்ணன் டிக்கெட் எடுக் குமாறு மாணவர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கு மாணவர்கள் சிலர் எங்களிடம் டிக் கெட் எப்படி கேட்கலாம் என்று கூறி நடத்துனரிடம் பஸ்சை ஓரமாக நிறுத்தும் படிகூறி தகராறில் ஈடுபட்டனர். உடனே டிரைவர் சக்திவேல் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். பிறகு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் மீண்டும் நடத்துனர் டிக்கெட் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களில் சிலர் டிரைவர் மற்றும் நடத்துனரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து மாநகர பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் சம்பவம் குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி தாக்குதல் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாநகர பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.