அரக்கோணம் அருகே ஆபத்தான முறையில் அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர் தவறி விழுந்து நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவர் பேருந்தின் படியில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் தவறி விழுந்த அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். 
கல்லூரிக்குச் செல்லும் போது நிகழ்ந்த இந்த விபத்தில் காயமடைந்த புதுகண்டிகை பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுபோன்று அரசுப் பேருந்துகள் மற்றும் சென்னை புறநகர் ரயில்களில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அண்மையில் புறநகர் ரயிலில் ஆபத்தான முறையில் மாணவி ஒருவர் பயணம் செய்யும் வீடியோக்கள் வெளியாகிய நிலையில் தற்போது உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

இதேபோல் கடந்த 10 ஆம் தேதி வேலூரில் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த கல்லூரி மாணவன் கை நழுவி கீழே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியிருந்ததும் இதில் குறிப்பிடத்தகுந்தது.