'யு டியூப்' பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில், இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 34; டிப்ளமோ படித்துள்ளார். வீட்டில் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி, 28.இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு, சமீபத்தில் நடந்த மருத்துவ சோதனையில், கடந்த 13ம் தேதி பிரசவம் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் பிரசவ வலி ஏற்படவில்லை.நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. லோகநாதன், தன் அக்கா கீதா உதவியுடன், 'யு டியூப்' சேனலை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். இதில், ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அத்துடன் கோமதிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது.

இதையடுத்து கோமதியை, புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லோகநாதன் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் முதலுதவி அளித்து, வேலுார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.