ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 14வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 502 இடங்களில் நடந்தது. ஆற்காடு அடுத்த ஆனை மல்லூர் விஏஓ அலுவலகம் அருகே நடந்த முகாமில் பொதுமக்களுக்கு கொரேனா தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்போது ஆனைமல்லூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த குமார் என்கிற சாந்தகுமார்(70) என்பவர் முகக் கவசம் அணியாமல் முகாமிற்கு வந்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்களிடம், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதீர்கள் எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இதைபார்த்த சுகாதாரத்துறையினர், "ஏன் இப்படி செய்கிறீர்கள்? என கேட்டனர். அதற்கு சாந்தகுமார், சுகாதார துறையினரை ஆபாசமாக பேசியதுடன் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும் மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராஜ் திமிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.