வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31வுடன் கால அவகாசம் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் 2020 - 21 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி சரிபார்ப்பு கால அவகாசம் சற்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வருமான வரி தாக்கலை செய்ய ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31ம் தேதி கடைசி நாளாக இருக்கும்.

ஆனால் நடப்பு ஆண்டில் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி வந்த கொரோனா, வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனையால், பலரும் தங்களது வருமான வரி தாக்கலை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் போனது.

வருமான வரி தாக்கல்: டிசம்பர் 31-க்குள் செய்யவில்லை எனில் என்ன ஆகும்..?!


கால அவகாசம்


இதன் காரணமாக செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 என்ற இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த அவகாசம் முடிவடைய இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், இதுவரையில் புதிய வருமான வரி தளத்தில் இ பைலிங் செய்தோரின் எண்ணிக்கையானது 4.67 கோடி பேராக அதிகரித்துள்ளது.

சரி பார்க்க அவகாசம் நீட்டிப்பு


இதற்கிடையில் 2019 - 20ம் நிதியாண்டிற்கான (2020 - 21 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி தாக்கலை சரிபார்க்க, பிப்ரவரி 28, 2022 கால அவகாசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக அதற்குள் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருந்தால், உங்களது செயல்முறையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

120 நாட்களுக்குள் சரிபார்க்கணும்


இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருமான வரி சட்டப்படி, டிஜிட்டல் கையோப்பம் இல்லாமல் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி தாக்கல், ஆதார் ஓடிபி அல்லது நெட் பேங்கிங் அல்லது டீமேட் கணக்கு, முன் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு, ஏடிஎம் மூலம் அனுப்பப்பட்ட குறியீடு மூலம் 120 நாட்களுக்குள் சரிபார்க்கப்பட வேண்டும்.

கவனிக்க வேண்டிய விஷயம்


இது காகித வடிவத்தில் கையொப்பமிட்டு பெங்களூரு அலுவலகத்திற்கு அனுப்பியவர்களுக்கும், ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்தவர்களுக்கும் பொருந்தும். இது கட்டாயம் பிப்ரவரி 28க்குள் சரிபார்க்கப்பட வேண்டும் என வருமான வரித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால அவகாசமானது 2020 - 21ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.