2021-22-ம் கல்வி ஆண்டுக்கான தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பொதுமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வி ஆணையரகம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 7-ந்தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதனைத்தொடர்ந்து முன்னுரிமை பட்டியல் 10-ந்தேதி வெளியிடப்படும். அதில் திருத்தம், முறையீடுகள் எதுவும் இருந்தால் 11-ந்தேதி மேற்கொள்ளலாம். பின்னர் 13-ந்தேதி இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படும்.

அதையடுத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் எனவும் பட்டதாரி ஆசிரியர்கள் எனவும் மாவட் டம், வருவாய் மாவட்டம், ஒன்றியம் எனவும் தனித்தனியாக பிரித்து கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் கலந்தாய்வு வருகிற 19-ந்தேதி தொடங்க உள்ளது.

அன்றைய தினம் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக இடையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பிப்ரவரி மாதம் 18 ந்தேதியுடன் நிறைவடைகிறது.