தமிழகத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவை உள்ளூரில் சாகுபடி செய்யப்பட்டாலும் போதுமான அளவில் கிடைப்பதில்லை. இதன் காரணமாக உணவு தயாரிப்புக்கு முக்கியத் தேவையாக உள்ள தக்காளி, வெங்காயம், உருளை உள்ளிட்ட காய்கறிகள் அண்டை மாநிலங்களில் இருந்து இறக்கு மதி செய்யப்படுகிறது.

குறிப்பாக ஆந்திராவில் இருந்து தக்காளி அதிகளவில் லாரிகள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஆந்திர மாநிலத்தில் தக்காளி சாகுபடி சேதமடைந்தது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது.

வரத்து குறைந்ததால் தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒருகிலோ தக்காளி 150 வரை விற்பனையானது.  தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பசுமை காய்கறி அங்காடிகள் மூலமாக தக்காளி விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் தக்காளி சாகுபடியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உழவர் சந்தைகளின் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக விவசாயிகளுக்கு தக்காளி சாகுபடி செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக தக்காளி சாகுபடி செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்களைச்சேர்ந்த 3,500 நபர்களும், 3 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 60 பேரும் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக காய்கறி தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தக்காளி சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தரமான விதைகளை தேர்வு செய்தல், உரங்கள், சந்தைபடுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.