இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஓமிக்ரான் உறுதியானது. இதையடுத்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நபரிடம் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜீன் சோதனை செய்யப்பட்ட பின்பே இவர்கள் 7 பேருக்கும் ஓமிக்ரான் உள்ளதா என்று தெரியும்.

இதில் காங்கோவிலிருந்து தமிழகம் வந்த ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறியுடன் ஓமிக்ரானுக்கு முந்தைய அறிகுறியும் இருக்கிறது. அந்த பெண்ணுக்கு எஸ் ஜீன் இல்லை. இனிதான் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அந்தப் பெண்ணை தற்போது திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனிமைப் படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ய மருத்துவ குழு முகாமிட்டுள்ளன.