ராணிப்பேட்டை நவல்பூரைச் சேர்ந்த ராஜன் (35),(பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் மனைவி மற்றும் 3, 2 வயதில் இரண்டு பெண் பிள்ளைகளோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஏற்பட்ட விபத்தில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இவரின் தம்பிகள் இருவர் அண்ணனுக்கு உதவி செய்து வந்தனர். அவர்களுக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜன் இறந்து விட்டார். உடனே அவர் குடியிருந்த வீட்டுக்கு முன்பு பந்தல்போட்டு ஈமச்சடங்குக்கான ஏற்பாடுகளை தம்பிகள் செய்ய முற்பட்டனர். அப்போது வீட்டின் உரிமையாளர் தனது மகளுக்கு திருமணம் நிச்சய மாகிவிட்டது. ஆகவே பிணத்தை இங்கு வைக்கக்கூடாது என்று கராறாக கூறி விரட்டினார். உடனே இறந்தவரின் தம்பிகள் தாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு உடலை கொண்டு வந்தனர்.

அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் நான் இங்கு அனுமதிக்கமாட்டேன் என்று விரட்டினார். இதனால் மனவேதனையும், செய்வதறியாதும் திகைத்த தம்பிகள் தங்களின் பூர்வீக வீட்டில் இருக்கும் உறவினர் ஒருவரை நாடினர். தங்களின் அண்ணன் உடலை அந்த வீட்டுக்கு முன்பு தெருவில் வைத்து சடங்குகளை முடித்து ஆற்றுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மன்றாடி அனுமதி பெற்றனர். அதன் பிறகு உடலை அங்கு கொண்டு சென்று வீதியில் வைத்து ஈமச்சடங்குகளை செய்து அடக்கம் செய்ய சென்றனர். மனிதநேயம் தொலைந்து சுய நலம் மிகுந்த மனிதர்களால் ஒருவர் செத்தும் அவரை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட அழைக்கழிப்பு வேதனையளிப்பதாக உள்ளது.