காவேரிப்பாக்கத்தில் பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த வேகாமங்களம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(41), எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை அதேபகுதியில் உள்ள பாலாற்றில் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி பாலாற்றில் விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த அவரது தம்பி ஆனந்தன்(37) மற்றும் அதேபகுதியை சேர்ந்த ராஜா (50) ஆகியோர் சரவணனை மீட்க பாலாற்றில் இறங்கினர். பாலாற்றில் ஓரத்தில் அதிகளவில் மண் அரிப்பு ஏற்பட்டதால் அவர்களால் மேலே ஏறி வர முடியவில்லை. இதையடுத்து, 3 பேரும் பாலாற்றில் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருந்துள்ளனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணி மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விழைரைந்து சென்றனர். மேலும், ராணிப்பேட்டை தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன், உதவி மாவட்ட அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நிலைய அலுவலர் அரி கிருஷ்ணன் ஆகியோர் 8 பேர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலமாக சரவணன் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் மீட்டனர். ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு லப்பர் படகு மூலம் ஆனந்தனை மீட்டனர். இதையறிந்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், நெமிலி தாசில்தார் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.