தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்த்துறை சார்பில் அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு மாடித் தோட்ட தொகுப்பு, விதை மற்றும் செடிகளை மானிய விலையில் வழங்கினார். உடன் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்ட துவக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்த்துறை சார் பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குநர் லதா மகேஷ் வரவேற்றார். கைத்தறி அமைச்சர் காந்தி நகர்ப்புறங்களில் மாடித்தோட்டம் அமைக்க ரூ.900 மதிப்புள்ள 5 வகை காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள், தென்னை நார் கட்டிகள், உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், இயற்கை பூச்சி கொல்லி ஆகிய தொகுப்பை பயனாளிகளுக்கு மானிய விலையில் அதாவது ரூ.225க்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
மேலும் ஊரகப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் காய்கறி தோட்டம் தங்களின் அன்றாட உணவில் சத்தான காய்கறிகளை உண்ணும் வகையில் கத்தரி, மிளகாய், வெண்டை, தக்காளி, அவரை, புடலை, பாகல், கொத்தவரை, தட்டைபயிறு, முருங்கை, சின்ன வெங்காயம், கீரை அடங்கிய 12 வகை காய்கறி விதைகளை வழங்கினார். 

தொடர்ந்து உணவே மருந்து எனும் கூற்றின்படி மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பல்வேற நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு. சக்தியுடைய பழங்கள், காய்கறிகளான பப்பாளி, கறிவேப்பிலை, புதினா, கற்றாழை, ஓமவள்ளி, துளசி, பிரண்டை மற்றும் எலுமிச்சை ஆகிய 8 செடிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா பஞ்., யூனியன் தலைவர் வெங்கடரம்ணன், மற்றும்  தோட்டக்கலை மலைப்பயிர்த் துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.