ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காவேரிப்பாக்கம் யூனியனுக்கு உட்பட்ட சிறுவளையம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியும் முழுமையாக நிரம்பியது. கரைகள் பலமாக இல்லாத காரணத்தால் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏரியின் ஒரு மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது. தகவலறிந்து விரைந்து வந்த பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சந்திரன், வருவாய் ஆய்வாளர் மருதாச்சலம் உள்ளிட்டோர் பொதுமக்கள் துணையுடன் மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தினார்கள். மேலும் பொக்லைன் மூலமாக ஏரியின் கரை பகுதியை மேடுபடுத்தினர்.

மேலும் ஏரியின் மதகு உடைந்த பகுதியில் ஒரு சில வீடுகள் மட்டுமே இருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஏரியின் கரைப்பகுதிகளை பலப்படுத்த பொதுமக்கள் மாவட்ட நிர்வா கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நள்ளிரவில் ஏரி உடைந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.