ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ- மாணவிகளுக்கும், காந்தி மற்றும் ஜவர்கலால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிறந்த நிலைக்கு
உலகில் உள்ள 6 செம்மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று. உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றளவும் ஒலி வடிவிலும், எழுத்து வடிவிலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்ற மொழி தமிழ்மொழி. நம் வாழ்க்கையில் குறைந்தது 10 திருக்குறளை பின்பற்றி நடந்தால் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு செல்லலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல அரிய கருத்துக்களை திருக்குறள் நமக்கு எடுத்துரைக்கிறது.
பேச்சாற்றல் ஒரு நபரின் தனித்துவத்தையும், சொல் ஆற்றலையும் வெளிக்கொண்டு வருகிறது. ஒரு நாட்டின் தலைவரின் பேச்சுத்திறமையே அவரின் ஆளுமையை பறைசாற்றுகின்றது. ஆளுமையை வளர்க்கும் திறன் பேச்சாற்றலுக்கு உண்டு. மாணவ- மாணவிகள் நாட்டின் தலைவர்களின் வாழ்க்கை வரலாறை பள்ளிப் பருவத்திலேயே கற்றறிந்து அவர்களின் புகழை அனைவரிடமும் தெரிவிக்கும் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.