வேலூர் அருகே உள்ள அமிர்தி வன உயிரின பூங்காவில் மான்கள் , நரிகள் , சிவப்பு தலை கிளிகள் , காதல் பறவைகள் , ஆமைகள் , மயில்கள் , முதலைகள் , காட்டுப் பூனைகள் , கழு குகள் , வாத்துகள் , காட்டுக் கிளிகள் , முயல்கள் , மலைப்பாம் புகள் உள்ளிட்டவை பொதுமக்கள் பார்வைக்காக கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க பூங்காவில் விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நுழைவுவாயிலில் பொதுமக்களுக்கு கைகழுவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிர்தி பூங்காவில் உள்ள வன ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது. 

ஊழியர்கள் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் , விலங்குகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் உத்தரவின் பேரில் , மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் சுஜாதா , உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் மேற்பார்வையில் விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஜமுனாமரத்தூர் கால்நடை மருத்துவர் வரதராஜன் , அமிர்தி வனச்சரக அலுவலர் முருகன் , வனவர் ரவேந்திரன் ஆகியோர் அனைத்து விலங்குகளையும் பரிசோதனை செய்தனர். மேலும் பூங்காவில் உள்ள பறவைகள் மற்றும் விலங்கு களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.