கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு
இன்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு கொரோனா விதிகளை வலியுறுத்தி அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
''கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி பின்பறற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம், தனி மனித இடைவெளி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை மீறும் நபர்களுக்கு, அதாவது முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்குத் தயக்கமின்றி அபராதம் வசூலிக்க அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்
சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 1.15 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ள நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். தொற்று அதிகம் கண்டறியப்படும் மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற மாவட்டங்களிலும் அஜாக்கிரதையுடன் இல்லாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
15 டூ 18 வயதுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி
இரண்டாம் தவணை வந்தும் தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதேபோல் 15 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். தொற்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தனிமைப்படுத்துதல், தொடர்புடைய நபர்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.