ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே மாவட்ட வேலை வாய்ப்புமையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டமானது தனியாக பிரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாவட்டத்திற்கென தனியாக வேலை வாய்ப்பு மையம் அமைக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று இம்மாவட்டத்திற்கென தனியாக மாவட்ட வேலை வாய்ப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான வேலை வாய்ப்பு மையம் முத்துக்கடை பஸ் நிலையம் அருகே அமைப்பதற் கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நேற்று திறக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு மைய உதவி இயக்குனர் (வேலூர்) வே.செந்தில்கு மார் கூறியதாவது:

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் முத்துக்கடை பஸ் நிலையம் அருகே இன்று (நேற்று) புதிதாக மாவட்ட வேலை வாய்ப்பு மையம் திறக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் பத்தாவது, பன்னிரெண்டாவது, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்த மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்பு முன்பதிவிற்கு வேலூர் செல்லவேண்டிய தேவையில்லை.

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். புதிதாக திறக்கப்பட்டுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலமாக மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித் தொகை உரிய முறையில் வழங்கப்படும்.

மேலும், மாணவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் தொழில் நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா ஓரிரு நாட்களில் பொறுப்பேற்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.