பொன்னை பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் நேற்று காலை விநாயகர் சிலையில் திடீ ரென கண் திறந்து இருப்பதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை பெருமாள் கோயில் தெருவில் பழமை வாய்ந்த பொன்னன் கணபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தினமும் காலை மற்றும் மாலையில் பூஜை செய்து வருகிறார்.

வழக்கம்போல் நேற்று காலை 7 மணிக்கு கோயிலுக்கு வந்த பூசாரி விக்னேஷ், பூஜையை முடித்துவிட்டு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மூலவர் விநாயகரை வழிபட்டுள்ளார்.

அப்போது விநாயகர் சிலையில் மாற்றம் தெரிந்துள்ளது. சிலையை உற்று கவனித்ததில், விநாயகர் கண்கள் கருவிழி, வெண் படலத்துடன் கண் திறந்து இருப்பதைக் கண்டு பரவசமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள பக்தர்கள் திரண்டு வந்தனர். விநாயகர் சிலையில் கண்திறந்து இருப்பதை பார்த்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கோயிலுக்கு திரண்டு வந்து சுவாமியை தரிசித்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமானது. இதற்கிடையில், கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் நிர்வாகிகள் இங்கு வந்து பக்தர்களை கட்டுப்படுத்தி கோயில் கதவுகளை பூட்டினர்.