வேலுார் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கார்கூர் அடுத்த கொத்த மாரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வினீத் (23). ஒசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் அசோகன் (44). இவரது மகன் ஆகாஷ் (23).கோழிப்பண்ணை தொழிலாளி. புத்தாண்டு முன்னிட்டு விடுமுறையில் ஊருக்கு வந்த வினீத் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஆகாஷ் மற்றும் சிலருடன் சேர்ந்து மது போதையில் கேக் வெட்டி, டான்ஸ் ஆடி புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்தார்.

அப்போது வினீத்துக்கும், ஆகாசுக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதை வினீத்தின் அத்தை மலர் (36) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது வினீத்தின் அத்தை மலரை, ஆகாஷ் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. அக்கம், பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மலர், தனது மகள் கண்ணகி, வினீத் மற்றும் உறவினர்களுடன் ஆகாஷ் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷின் தந்தை அசோகன், வினீத்தை சரமாரியாக தாக்கினார். ஆகாஷ் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வினீத்தின் இடது பக்க மார்பில் சரமாரியாக குத்தினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் வினீத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். வினீத்தை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப் பதிவு செய்து அசோகன், அவரது மகன் ஆகாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.