ரயிலில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று மதியம் பயணிகளை சோதனை செய்யும் காவலர்கள் ஒரு நபரைச் சோதனை செய்ய முற்பட்ட போது அவர் தன்னை போலீஸ் என கூறி அடையாள அட்டையை காண்பித்து ரயில் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.பின்பு ஒரு மணி நேரம் கழித்து வெளியே வரும்போது இரண்டு பைகளை கொண்டு வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை சோதனை செய்தபோது அவர் கையில் 2 செல்போன்கள் மற்றும் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது போலீஸ் என கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.

அடையாள அட்டையை சோதனை செய்து பார்த்தபோது 17 ஆண்டுகளுக்கு முன்பு காவலர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்நபர் அரக்கோணத்தை சேர்ந்த செந்தில்குமார்(45) என்பதும் அவர் முன்னாள் காவலர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில், இவர் கடந்த 2003ஆம் ஆண்டு காவல் துறையில் காவலராக தேர்வாகி பூந்தமல்லி பட்டாலியனில் பணிபுரிந்து வந்துள்ளார். பணியின்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், அதன்பின்பு நல்லெண்ண நடத்தை விதிகள் மீறிய காரணத்தினால் கடந்த 2010 ம் ஆண்டு காவல் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.போலீசாரின் தொடர் விசாரணையில் இவர் ரயில்களில் பைபிள் புத்தகங்களை விற்று வருகிறார் என்பதும், பைபிள் புத்தகங்களை விற்பனை செய்யும் போது பயணிகளின் செல்போன்கள் மற்றும் நகைகளை திருடி வந்ததும்தெரியவந்தது.

மேலும், காவலர் பயிற்சியின்போது அளிக்கப்பட்ட காவல்துறையின் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அரக்கோணத்திலிருந்து சென்னை வரும் ரயில்களிலும், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்களிலும் போலீஸ் எனக்கூறி டிக்கெட் எடுக்காமல் சென்று வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.பைபிள் புத்தகம் விற்பது போலச் சென்று பயணிகள் தூங்கும் நேரம் மற்றும் அவர்கள் கழிவறை செல்லும் நேரத்தில் அவர்களின் செல்போன் மற்றும் நகைகளை திருடிவந்துள்ளார் என்பதும் இவர் மீது ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா உள்ளிட்ட 3 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள், தமிழகத்தில் அரக்கோணம், வேலூர் காவல் நிலையங்களிலும் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மேலும் இவர் ரேணிகுண்டா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு சமீபத்தில் வெளியே வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காவலர் செந்தில்குமாரிடமிருந்து 5 சவரன் தங்க நகை மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.