ராணிப்பேட்டை அடுத்த வேலம் புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சந்தியா (17). அம்மூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார் அதே ஊரைச்சேர்ந்த காசி மகன் கதிர்வேலு(23). கேட்டரிங் படிப்பு முடித்து வேலை செய்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

இதனால் காதலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இளம்பெண் சந்தியா தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதை கேள்விப்பட்ட கதிர்வேலுவும், அன்றிரவே நீலகண்ராயன்பேட்டை கிராமம் அருகே உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த இரு வீட்டு குடும்பத்தினரும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஒன்று கூடி பேசி இருவரது உடல்களையும் கிராமத்தில் வைத்து அடக்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அதற்குள் தகவலறிந்த ராணிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.