அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பொதுமக்கள், நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார்கள் சென்றாலும் நகராட்சி அதிகாரிகள், பெயரளவுக்கு மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகுவதும் தொடர் கதையாகவே நடந்து வந்தன.
இந்தநிலையில் நேற்று புதிய பஸ் நிலையத்தில் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகளின் முன்பாக நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் கடையின் விளம்பர பலகைகள் ஆகியவற்றை அரக்கோணம் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், தாசில்தார் பழனிராஜன், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.