ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் ஆயிரத்து 28 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன.

இப்பகுதியில் வன உயிரியல் பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினத்திடம் பாணாவரம் கிராம மக்கள் நேற்று மனு கொடுத்தனர்.

பாணாவரம் கிராமத்தின் அருகே சோளிங்கர் நரசிம்மர் கோயில், காவேரிப்பாக்கம் ஏரி, திருப்பாற்கடல் கோயில், வாலாஜா தன்வந்திரி கோயில் உள்ளிட்ட முக்கிய தலங்கள் அமைந்துள்ளதால் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் போக்குவரத்துக்கு உகந்த ரயில்வே ஸ்டேஷன் இருப்பதால் வேலுார், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட மாநகரங்களில் இருந்தும், பக்கத்து கிராமத்தில் இருந்தும் மக்கள் பெருமளவில் வந்து செல்ல வசதி வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா துறைக்கு வருமானமும் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.