ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முகக் கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் எச்சரித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல், இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க அனைத்து வட்டாட்சியா்கள், உள்ளாட்சித் துறை அலுவலா்கள், சுகாதாரத் துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். இதே போல, சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், உணவகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
இந்த நடைமுறைகள் அனைத்து உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறைகள் ஜன.5 முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதித்த நபருடன் நேரடி தொடா்பிலிருந்த 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருந்து வருகின்றனா் என தெரிவித்துள்ளாா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.