சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.10 மணிக்கு கோயம்புத்துாருக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் அரக்கோணத்துக்கு காலை 7.10 மணிக்கு வருகிறது. அரக்கோணம் உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்தவர்கள் வேலுாரில் உள்ள கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் கம்பெனிகளுக்கு செல்பவர்கள் இந்த ரயிலையே நம்பியுள்ளனர்.
கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இப்போது இன்ஜினில் இருந்து 2 பெட்டிகள் மட்டுமே முன்பதி வில்லாத பெட்டிகளாக உள்ளது. இந்த 2 பெட்டியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் தவிர்க்க முடியாத சூழலால் முன்பதிவு பெட்டிக்கு வரும்போது டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் ரயிலின் பின் பகுதியில் 2 முன்பதி வில்லாத பெட்டிகள் இணைத்தால் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் இருந்து வரும் பயணிகளுக்கு ரயில் ஏறுவதற்கு வசதியாக இருக்கும். குறிப்பாக காஞ்சிபுரம் மார்க்கத்தில் இருந்து வரும் பயணிகள் முன் பதிவில்லாத பெட்டியை தேடி பிளாட்பாரத்தில் நீண்டதுாரம் ஓட வேண்டியுள்ளது. இதனால் வயதான வர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் இருபுறமும் தலா 2 முன்பதிவில்லாத பெட்டிகள் என 4 பெட்டிகளை இணைக்க வேண்டும்.
அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.40 மணிக்கு பெங்களூருக்கு புறப்படும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இருபுறமும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும். கோவை மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மறுமார்க்கத்தில் இயக்கும்போதும் அலுவலக ஊழியர்களின் நேரத்துக்கு ஏற்ப இயங்ககூடிய ரயிலாக உள்ளது. எனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி இந்த ரயில்களில் மட்டுமாவது முன்பதிவில்லாத பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும் என்று பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.