பணத்திற்கு விலை போகாமல் இளம் தலை முறை வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், என்று வாக்காளர் தின விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் 12வது தேசிய வாக்காளர் தின விழா நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்பி தீபா சத்யன். டிஆர்ஓ முஹம்மது அஸ்லம் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர்பொது சுரேஷ் வரவேற்றார்.

இதில், வாக்காளர்தின விழா முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 430 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

பின்னர், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

இந்திய வரலாற்றில் மன்னர் ஆட்சி காலத்தில் அவர்களது பரம் பரையை சேர்ந்தவர்கள் ஆட்சிசெய்தனர். முகலாயர்களின் ஆட்சி காலத்தில் வாலின் கூர்மையை கொண்டும், யானையின் தும்பிக்கையின் மூலமாக மாலை அணிவித்தும் ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டில் குடஓலை முறையில் பண்டைய காலத்தில் தேர்தல் நடத்தப்பட்ட முறைகள், அதற்கான தகுதிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை பொறுத்தவரையில் நம் நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களாட்சி நடக்கிறது. சாதாரண மக்களும் ஆட்சி அதிகாரத்திற்கு மக்களின் துணை கொண்டுவர முடியும் என்கிற வகையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் வளர்ச்சி பாதையை சீர்படுத்தும் பணிகளில் நீதித்துறையும், பத்திரிகை துறையும் செயலாற்றி வருகிறது.

நாட்டின் அரசு எவ்வாறு செயல்பட வேண்டும். என் பதை இளம் வாக்காளர்கள் தான் முடிவு செய்கின்றனர். நாம் வாக்களிப்பதால் என்ன மாற்றம் நடந்துவிடும் என்கிற அவ நம்பிக்கையை முதல் தலைமுறை வாக்காளர்கள் கைவிட வேண்டும். பணத்திற்கு விலை போகாமல் இளம் தலைமுறை வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சட்டமன்ற தொகுதி வாரியாக சிறப்பாக பணியாற்றிய 12 வாக்குச்சாவடி நிலை அலுலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவி ஒருவர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டார். இதில், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள். பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.