ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம். சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய 6 நகராட்சிகளுக்கும் மற்றும் தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், அம்மூர், கலவை, திமிரி, விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறஉள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 288 நகர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், 4 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 284 உறுப்பினர்கள் தேர்வுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதையொட்டி, 1,067 பேர் வேட்பாளராக போட்டியிட்டு களத்தில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 406 (மின்னணு இயந்திரம்) வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழு வதும் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போது அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யன் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, வாக்காளர்கள் அச்சமின்றியும் சுதந்திரமாக வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. 
இதனால், யாரும் கவலைப்பட வேண்டாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் தீவிர பாதுகாப்பு அளித்தல், வாக்கு பதிவு முடிந்த பின்பு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லுதல், பின்னர் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 900 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் டிஎஸ்பிக்கள், இன்ஸ் பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என்றார்.