ராணிப்பேட்டை:
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சியான பாஜ., இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை நகராட்சயில் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்த சில நாட்களாக பாஜ நிர்வாகிகள் தீவிர முயற்சியில் இறங்கினர்.

மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜ., வில் சேர்ந்தால் 'கெத்தாக' சுற்றி வரலாம் என்று கணக்கு போட்டு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் பாஜ., வில் சேர்ந்தவர்கள், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்றதும் பல இடங்களில் 'ஜகா' வாங்கிவிட்டனராம்.

ராணிப்பேட்டை நகராட்சியில் 30 வார்டுகளிலும் வேட்பாளரை நிறுத்தலாம், அதற்கான டெபாசிட் தொகையை நிர்வாகிகளே கட்டிவிடலாம். மக்களிடம் சென்று 'தாமரை' சின்னத்துக்கு ஓட்டு கேட்போம், நமது சின்னம் அனைத்து மக்களுக்கும் போய் சேரட்டும். வேறு எந்த செலவும் செய்யவேண்டாம் நம் மீது நம்பிக்கை வைப்பவர்கள் ஒட்டு போடட்டும் என்று பாஜவில் நீண்டகால மாக உறுப்பினர்களாக இருப்பவர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் ராணிப்பேட்டை நகராட்சியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த 22 பேரில் பலர், தனித்து போட்டி என்றதும் யோசிக்கின்றனராம். ஏதாவது 'சாக்கு, 'போக்கு' சொல்கின்றனராம். சிலர் 'தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டனராம். மாவட்ட தலைமை கூடதில் அக்கரை காட்டவில்லை என்று மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

இதற்கிடையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ராணிப்பேட்டை நகராட்சியில் 6 வார்டுகளில் பாஜ வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதன்படி வார்டு 3ல் சிவமணி, வார்டு 25ல் சம்பத்குமார், வார்டு 27ல் கீதா, வார்டு 28ல் கமலேஷ், வார்டு 29ல் எம். முருகன், வார்டு 30ல் டி.முருகன் ஆகியோர் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.