ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த பெரப்பேரியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுடு காடு இல்லாததால் இறந்தவர் சடலங்களை அடக்கம் செய்வதில் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும். வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால். இங்குள்ள சிலர் பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் பெரப்பேரி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்ய கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வந்தார். அவரிடம், அப்பகுதி மக்கள், தங்களுக்கு நீண்ட காலமாக சுடு காடு இல்லை. வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கோரிக்கை தெரிவித்தனர்.

இதையடுத்து கலெக்டர், அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது. இப்பகுதியில் அரசு நிலங்கள் எதுவும் இல்லை என்றும், தனியார் சிலர் சுடுகாட்டுக்கு நிலம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கிருந்தபடி செல்போனில் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் பேசிய கலெக்டர், நில உரிமையாளர்களிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அப்போது, நெமிலி பிடிஓ சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.