அரக்கோணம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரூட் தல பிரச்னையில் ஈடுபடாமல் பாதுகாப்பாக சென்றுவர வேண்டும் என அரக்கோணம் ரயில்வே போலீசார் அறிவுறுத்தினர்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரயில், பஸ்களில் செல்லும் ஒரு சில மாணவர்களிடம் ‘ரூட் தல’ பிரச்னைகள் மற்றும் மோதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள், பயணிகள், மாணவர்களின் பெற்றோர் இடையே பெரும் கவலை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், காவல்துறை சார்பில் ‘ரூட் தல’ பிரச்னைக்கு முடிவு காணப்பட்டு வருகிறது. அனைத்து பஸ், ரயில் வழித்தடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு ‘ரூட் தல’ பிரச்னைகளில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு சிலர் கைது செய்யப்படுகின்றனர்.

இதனால் பட்டா கத்தி கலாச்சாரம் போன்றவைகள் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி அரக்கோணம்- சென்னை ரயில் மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அரக்கோணம்- சென்னை இடையே பள்ளிகள், ஐடிஐ, பாலிடெக்னிக், கல்லூரி, இன்ஜினியரிங் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இதையொட்டி அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, ரயில்வே போலீஸ் எஸ்ஐ ஆனந்தன் தலைமையிலான போலீசார் பல்வேறு அறிவுரைகள் கூறி வருகின்றனர். 

குறிப்பாக, ‘ரூட் தல’ பிரச்னையில் யாரும் ஈடுபடக்கூடாது. பள்ளி, கல்லூரிகளுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியுடன் பயணிக்க வேண்டும். கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து, புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளுடன் ரயில்வே போலீசார் பயணம் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.