ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிப்பேட்டை சோம சுந்தரம் நகரில் நேற்று மதியம், பாக்கெட் பால் 2 டிரேகளில் கலர் கோழிக் குஞ்சுகளை வைத்து பெண் ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரிடத்தில் கோழிக் குஞ்சு என்ன விலை என கேட்டதற்கு, பணத்துக்கு கோழிக்குஞ்சு விற்பனை இல்லை என்றதும், அப்ப என்னதான் தர வேண்டும் என கேட்டதற்கு உபயோ கமற்ற செல்போன்களை கொடுத்தால் செல்போன் ரகத்துக்கு ஏற்ப 2 முதல் 4 கோழிக்குஞ்சு தரப்படும் என்றார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் உபயோகமில்லாத செல் போனை வாங்கி என்ன செய்வீங்க என கேட்டதற்கு நாங்க இரும்புக் கடைக்காரரிடம் தருவோம். செல்போனுக்கு ஏற்ப அவர் எங்களுக்கு பணம் தருவார் என்றார்.

அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் பேட்டரி இல்லாத பழைய 'பேசிக்' மாடல் செல்போன் உள்ளது பரவாயில்லையா? என்றதும் அதுக்கும் அந்த பெண்மணி ஓகே சொல்லி 'பேசிக்' மாடல் செல்போனுக்கு 2 கலர் கோழிக்குஞ்சுகளை கொடுத்தார்.

இந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் சிறுவர், சிறுமியர் கலர் கோழிக்குஞ்சு வாங்கும் ஆசையில் வீட்டில் உப
யோகமில்லாத செல் போன்களை தேடிகண்டுபிடித்து எடுத்து வந்து கலர் கோழிக்குஞ்சுகளை வாங்கி சென்றனர். 

இதெல்லாம் சரி... நீங்க எங்க இருந்து வர்றீங்க இந்த செல்போனை வாங்கி என்ன செய்வீங் கன்னு அப்பெண்மணியிடம் கேட்டதற்கு முறையான, முழுமையான பதில் சொல்லவில்லை. செல்போனுக்கு கலர் கோழிக்குஞ்சு விற்பனை செய்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத் தியது.