ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் எதிரே உள்ள பிஞ்சி ஏரி, தண்டலம் ஏரி, புளியங்கண்ணு ஏரி உள்ளிட்ட நகரைச் சுற்றியுள்ள நன்னீா் ஏரிகள் அனைத்தும், நகர குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீா் மாசடைந்து வருவதாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதையடுத்து, கழிவுநீா்த் தேங்கிய பிஞ்சி ஏரியை நன்னீா் ஏரியாக மாற்றும் நடவடிக்கையை அப்போதைய மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி மேற்கொண்டு தனியாா் நிறுனங்கள், சமூக அமைப்புகளுடன் இணைந்து சி.எஸ்.ஆா். எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிதியில் சீரமைக்க உள்ளதாக கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 17 - ஆம் தேதி தெரிவித்தாா்.

தொடா்ந்து, பிஞ்சி ஏரியை பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, நகராட்சி ஆணையா் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், ஏரியில் நிரம்பியுள்ள கழிவுநீா் மற்றும் முள் மரங்களை அகற்றி சீரமைப்பது, கழிவுநீா் தேங்காதவாறு மழைநீா் வரத்துக் கால்வாய்களைச் சீரமைப்பது, கழிவுநீரைச் சுத்திகரிப்பது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

முதல்கட்டமாக பிஞ்சி ஏரி முழுவதும் வளா்ந்திருந்த முள்மரங்கள் அகற்றும் பணி பொதுப்பணித் துறை அதிகாரிகளால் தொடங்கப்பட்டு அகற்றப்பட்டன.

இதனிடையே, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், பிஞ்சி ஏரியைச் சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இதனால், 25 ஏக்கா் பரப்பளவு கொண்ட பிஞ்சி ஏரி கழிவுநீா்த் தேக்கமாக மாறியது. ராணிப்பேட்டை நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த ஏரியைச் சீரமைத்து, நன்னீா் ஏரியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சென்னையில் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்றி இருந்த வில்லிவாக்கம் ஏரி, ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், மாநகராட்சியால் மேம்படுத்தப்பட்டு, தற்போது சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இதே போல் சேத்துப்பட்டு ஏரி, மீன்வளத் துறை வாயிலாக, சுற்றுச்சூழல் பூங்காவாக பராமரிக்கப்படுகிறது.

பெங்களூரு மாநகரின் முக்கிய நீா்நிலையாக உள்ள அல்சூா் ஏரியை போல, பிஞ்சி ஏரியை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் பூங்காவாக மாறற வேண்டும் என்பதே ராணிப்பேட்டை நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடா்பான விரிவான செய்தி, தினமணி நாளிதிழில் கடந்த ஜனவரி 22 -ஆம் தேதி வெளியானது. இதன் எதிராலியாக பிஞ்சி ஏரியைச் சீரமைத்து, நன்னீா் ஏரியாக மாற்றி சுற்றுச்சூழல் பூங்காவாக பராமரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பிஞ்சி ஏரியை அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டு, ஏரியின் முழு பரப்பளவைக் கணக்கிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிஞ்சி ஏரியைச் சீரமைத்து நன்னீா் தேக்கும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.