அரசுக்கு சொந்தமான 7,000 சதுர அடி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் ஜேசிபி மூலம் அகற்றம் அரக்கோணத்தில் அதிகாரிகள் அதிரடி
அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி வீடுகளை நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் அரசுக்கு சொந்த மான பாட்டை புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடு மற்றும் கடைகளைக் கட்டி உள்ளனர். இவற்றை அகற்ற கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்பேரில், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் ஆர்டிஓ சிவதாஸ். தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையாளர் லதா. டிஎஸ்பி புகழேந்தி கணேஷ். நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம். நகர சார் ஆய்வாளர் கணேசன், நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள அடுக்குமாடி வீடுகள் மற்றும் கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால், அரசுக்கு சொந்தமான தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 7 ஆயிரம் சதுர அடி நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 31 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.